Monday, February 7, 2011

நேரம் இருந்தா கொஞ்சம் பாத்துட்டு போங்க.............

இன்று நான் வீட்டில் இருக்க நேர்ந்தது. நேரம் போகாமல் டீவியில் சேனலை மாற்றிக் கொண்டிருந்தேன் . ஸ்டார் மூவிசில் அப்பொழுதுதான் ஒரு படத்தின் பெயர் ஓடிக் கொண்டிருந்தது. படத்தின் தலைப்பே கவர்ந்தது. இதற்கு முன் இதன் முடிவை மட்டும் யதேச்சையாக பார்க்க நேரிட்டது . இன்று முழுவதும் பார்த்து விடுவது என்று அமர்ந்தேன். சும்மா சொல்லக் கூடாதுங்க படத்தை அவ்வளவு அழகா எடுத்துருக்காங்க .. நேர்த்தியான காட்சி அமைப்புகள் ... நீங்களும் பார்க்கணும் தான் இதை எழுதறேன் ..சரிங்க படத்துக்கு போலாம் வாங்க...


ஜெர்மனியின் தலை நகரமான பெர்லினில் படம் துவங்குகிறது. படத்தின் நாயகனாக சிறுவன் ப்ரூனோ ( Bruno (Asa Butterfield)). ராணுவத்தில் உயர் அதிகாரியான அப்பா , அமைதியாக அம்மா , அக்கா என்று சிறு குடும்பம் . தன் நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றி திரிந்து கொண்டிருக்கும் வேளையில் அப்பாவிற்கு கமேண்டேண்டாக பதவி உயர்வு கிடைத்து இடம் பெயர வேண்டிய நிலைமை வருகிறது. விருப்பம் இல்லாமல் புதிய வீட்டிற்கு பயணிக்கிறான் ப்ரூனோ ..
இங்கே ப்ரூனோ சந்திக்கும் நிகழ்வுகளையே படமாக்கி இருக்கிறார்கள் . புதிதாக வந்துள்ள வீட்டிற்கு அருகிலேயே அப்பா தலைமை பொறுப்பாற்றும் சிறை ((concentration camp), அரசியல் கைதிகளையும் , போர்க் கைதிகளையும் அடைத்து வைக்கும் இடம்) இருக்கிறது. ஆனால் இது அவர்களுக்கு தெரியாது .அவனிடம் விவசாயம் செய்யும் இடம் என்றே  கூறி இருப்பார்கள்.ஒரு நாள் தனது அறையில் இருந்து ஜன்னல் வழியாக ப்ரூனோ இதில் கைதிகள் வேலை செய்வதைக் காண்கிறான். அவர்களுக்கெல்லாம் கோடு போட்ட கைதி உடை(striped dress) கொடுக்கப் பட்டிருக்கும். புரியாமல் இதை பற்றி அம்மாவிடம் கேட்கிறான். அம்மா இனிமேல் அந்த பக்கம் பார்க்க கூடாது என அறிவுறுத்துகிறாள் .

வேண்டாம் என்பதை செய்ய தூண்டும் வயது. அடுத்த நாள் அம்மாவிடம் விளையாட போவதாக கூறிவிட்டு சிறைச்சாலை பக்கம் செல்கிறான். சிறை என்று தெரியாமல்.
அங்கே அவனுடைய வயதில் ஷுமுயேல் (Shmuel (Jack Scanlon))-ஐ சந்திக்கிறான்.அவன் அங்கே கைதியாக இருக்கிறான், தனிமையில் வாடிய ப்ரூநோவுக்கு  அவனுடைய வயதில்கிடைத்த நண்பனுடன் தனது நட்பை தொடர்கிறான். தினமும் அவனுக்கு சாப்பிடுவதற்கு பொருட்கள் எடுத்து செல்கிறான். இந்நிலையில் ப்ரூனோவிற்கு பாடம் சொல்லி கொடுக்க ஒரு ஆசிரியரை நியமிக்கிறார் அப்பா. ஆசிரியரால் சொல்லி தரப்படும் ஜெர்மனி ராணுவத்தைப்  பற்றிய கொள்கைகளும்  சிறைக் கைதிகளை பற்றிய அவருடைய கருத்தும் ப்ரூனோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது கீழே விழுந்து ப்ரூனோவுக்கு அடி பட்டு விடுகிறது. தன்னுடைய வீட்டில் சமையல் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கும் சிறை கைதியான பவல் அவன் காயத்திற்கு கட்டு போட்டு விடுகிறார்.தான் ஒரு டாக்டர் என்று  கூற, பின்னர் ஏன் இப்படி வீட்டு  வேலை செய்ய வேண்டும் என்று அவரிடம் ப்ரூனோ கேட்கிறான் . அந்த நேரத்தில் ப்ரூனோவின் அம்மா வந்து விட அங்கே மௌனம். ஒரு கைதிக்கு நன்றி சொல்ல அவள் தயங்கும் அந்த காட்சியை அழகாக எடுத்திருக்கிறார்கள். அம்மாவாக நடித்திருக்கும் எல்சாவின் ( Elsa (Vera Farmiga) நடிப்பு அருமை..

அங்கு குடியேறிய சில நாட்களில் ராணுவ அதிகாரியாக வரும் கோட்லர் (Lieutenant Kurt Kotler)மூலமாக தனது கணவரின் ராணுவ அதிகாரத்தை பற்றி அவளுக்கு தெரிய வருகிறது. கைதிகளை அடைத்து வைக்கும் சிறை அது அல்ல கும்பல் கும்பலாக அவர்களை கொன்று குவிக்கும் இடம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். அன்று முதல் கணவனுக்கும் அவளுக்கும் இடையே பிரச்சினைகள் எழுகிறது.

 ஒரு நாள் உணவருந்தும் வேளையில் பரிமாறிக் கொண்டிருந்த சிறைக் கைதி பவலின்(ப்ரூனோவின் காயத்திற்கு கட்டு போட்டு விட்டவர் ) கை பட்டு ஒயின் கீழே கொட்டி விட ராணுவ அதிகாரி கோட்லர் அவரைத் தாக்க பாவம் அவர் உயிரிழக்கிறார் . இதை கண்டும் தடுக்காத தனது கணவரின் போக்கை கண்டித்து வாதிடுகிறாள்..

 அடுத்ததாக வீட்டில் வேலை செய்வதற்காக வேறு கைதிகள் அழைத்து வர படுகிறார்கள் அதில் ஷுமுயேல் (Shmuel)-சும் வருகிறான்.ப்ரூனோ அவனை தனது வீட்டில்பார்த்தமகிழ்ச்சியில் அவனுக்கு சாப்பிடுவதற்கு கேக்கை கொடுக்கிறான்.
அந்த நேரத்தில் கோட்லர் வந்து விட ஷுமுயேல்-சை கோபப் பார்வை பார்க்க அவன்ப்ரூனோ தான் சாப்பிடுவதற்கு தந்தாக கூறுகிறான். ஆனால் ப்ரூனோ கோட்லர் மேலுள்ள பயத்தினால் தான் கொடுக்கவில்லை என்று பொய் சொல்ல , கோட்லர்  ஷுமுயேல் திருடியதாக குற்றம் சாட்டி அவனை தண்டிக்கிறான் .

தான் செய்த காரியத்திற்காக வருத்தப் படும் ப்ரூனோ அதன் பின் தினமும் சிறைச்சாலையின்பின் புறம் செல்கிறான். ஆனால் ஷுமுயேல்-சை காணவில்லை. ஒரு நாள் ஷுமுயேல் வருகிறான் ஆனால் கோட்லர்- ஆல் கண்களின் மேலே தாக்க பட்ட காயத்துடன்.
இருந்தாலும் ப்ரூநோவை மன்னித்து விடுகிறான். இந்த இடத்தில் இரண்டு சிறுவர்களுமே நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் ...

ப்ரூனோவின் அம்மா தன் கணவனுடன் சண்டையிட்டு தன் அத்தை வீட்டிற்கு செல்வதாக முடிவெடுக்கிறாள். இந்த இடத்தில் தன் குழந்தைகள் வளர்வதை விரும்பவில்லை இனி எப்போதும் இங்கே திரும்பி வருவதில்லை என்று முடிவு செய்கிறாள். இதனால் ப்ரூனோ மிகவும் மனமுடைந்து போகிறான். இறுதியாக ஷுமுயேல்-சை பார்த்து விட வேண்டும் என்று அவனை காண செல்கிறான். அந்நேரத்தில் தனது சிறைக்குள் காணமல் போய் விட்ட தந்தையை கண்டு பிடிக்க உதவுமாறு ப்ரூனோவிடம் ஷுமுயேல் கேட்க மறுக்க முடியாமல் சரி என்கிறான். ஆனால் இதற்கு சிறைச்சாலைக்கு உள்ளே செல்ல வேண்டும். எப்படி என்று யோசிக்கும் போது சிறை கைதியின் உடையை(striped dress) ஷுமுயேல் திருடி கொண்டு வந்து தருகிறான்.


அவர்கள் இருவரும் சிறைச்சாலைக்கு உள்ளே சென்று ஷுமுயேல்-ன் அப்பாவை தேடிக் கொண்டிருக்கும் போது கைதிகளை கும்பலாக கொள்வதற்காக அழைத்து செல்ல படுகிறார்கள். அந்த கும்பலில் சிறுவர்கள் இருவரும் சிக்கி கொள்கிறார்கள் .துணிகளை எல்லாம் கழற்ற சொல்கிறார்கள். ஆனால் கைதிகள் இது தெரியாமல் குளிப்பதற்காக அழைத்து வரப பட்டிருக்கிறோம் என்று நினைக்கின்றனர்..


அப்பொழுதுதான்  ப்ரூநோவை காணவில்லை என்றுதேட தொடங்குகிறார்கள் . அவன் சென்ற வழியெல்லாம் தேடி கடைசியாக சிறைச்சாலையை அடைகிறார்கள்.. அங்கே வெளியே மின்சார வேலிக்கு கீழே குழிதோண்டப் பட்டு ப்ரூனோவின் துணிகள் அவிழ்த்து போட பட்டிருக்கும். சிறைக்குள் தான் அவன் இருக்கிறான் என முடிவு செய்து அவர்கள் உள்ளே நுழைகிறார்கள் ..

ஆனால் அதற்குள் Zyklon B என்ற விஷ வாயு செலுத்த பட்டு கும்பலாக கைதிகள் கொல்லப்படுகின்றனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவர்.

மழை பெய்ய தொடங்குகிறது . மின்சார வேலிக்கு கீழே கிடக்கும் ப்ரூனோவின் ஆடையைப் பார்த்து  அவன்  அம்மா அழும் காட்சியில் நமது கண்களிலும்  கண்ணீர் வரும்.


 இறுதியாக கைதிகள் கொள்ளப்படும் அறைக்கு வெளியே கைதிகள் அவிழ்த்து துணிகளை(striped dress) காட்டி அந்த காட்சி உடனே  படத்தை முடிக்கிறார்கள் .....

படத்தில்  வன்முறையான காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை என்றாலும் ஜெர்மனி ராணுவத்தின் அடக்கு முறையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ...  இயக்குனரின் திறமையை பாராட்டலாம் .


படத்தின் இடையே விளம்பரம் போடும் போது நம் தமிழ் சேனல்கள் பக்கம் வர நேர்ந்தது. நம்ம சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் நடித்த நாயகன் படம் போட்டிருந்தார்கள். சும்மா டெரரா நடிச்சிட்டு???????? இருந்தாரு ... வெல வெலத்து போயி நான் ஸ்டார் மூவீஸ் கே ஓடிட்டேன்க .. 

படத்தில் நடித்திருந்த அனைவரும் தனதுபங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் .. குறிப்பாக அம்மாவாக வரும் எல்சா , சிறுவர்கள் ப்ரூனோ மற்றும் ஷுமோல் இயல்பாக நடித்திருக்கிறார்கள்... நல்ல திரைக்கதை ..நாவலாக வெளிவந்த கதையைதிரைப்படம் ஆக்கிஇருக்கிறார்கள் ...2008 ல் வெளி வந்தது இந்ததிரைப்படம் ...

முடிந்தால்டவுன்லோடு செய்து பாருங்கள் .. நன்றி ....



Sunday, January 30, 2011

ஆண்களின் மன நிலை என்று மாறப் போகிறது??????

மனித மனங்களின் வக்கிரங்களை நினைத்து பார்க்கவே கேவலமாக இருக்கிறது ... இன்று மாலை நான் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது நான் சந்தித்த ஒரு நபரின் உள்ளக் குமுரலையே இங்கே பதிவாக்கி உள்ளேன் .....

பார்க்கவே அவ்வளவு வசீகரம் அந்த முகத்தில்....... ஆனால் கண்ணில் மட்டும் அவ்வளவும் சோகம் ..... அந்த பெண்ணின் பெயர் ரேகா ( ஆனால் சமூகத்தில் விலை மாது  )..

 அடித்து பிடித்து அந்த பேருந்தில் ஏறினேன்... மூச்சடைப்பு ஏற்படும் அளவிற்கு கூட்டம்... சமாளித்து உள்ளே சென்றேன்.. அவ்வளவு கூட்டத்திலும் வசீகரித்தது அவள் அழகு ... ஆண்களுக்கும்  பெண்களுக்கும்  இடையில் பேருந்தின் நடுவே  நின்றிருந்தேன் ... எனதருகில் ரேகாவும்..

ஓட்டுனர் பிரேக் போடும் போதெல்லாம் எனதருகில் நின்றிருந்த அந்த மூன்று ஆண்களும் அவளின் மேலே போய் தாறுமாறாக  மோதினர் .. பிரேக் போடாத சமயங்களிலும்  கூட ...

அவர்களின் பார்வைகள் அவளின் ஜாக்கெட்டுகுள்ளேயே இருந்தன ...
ரேகாவும் அவர்களின் பார்வைகளை கண்டு கூச்சபட்டதாகவே தெரியவில்லை ..இரண்டு நிறுத்தங்களுக்கு  பிறகு எங்கள் இருவருக்கும் ஒரு இருக்கை கிடைத்தது அமர்வதற்கு.. அமர்ந்ததும் அவளிடம் வினவினேன்  இயல்பான எரிச்சலுடன் ஏன் இந்த ஆண்கள் இப்படி செய்கிறார்கள் என்று ...

அதற்கு அவள் அளித்த பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது ...
"" அவர்கள் தான் எனக்கு சோறு போடும் புண்ணியவான்கள் அவங்களை திட்டாதே"" என்றாள்...
நான் அவள் சொல்வது புரியாமல் அவளையே பார்த்தேன் ... என்னை பார்த்து கண்ணை சிமிட்டினாள்.... நான் புரிந்து கொண்டேன் ...

அதன் பின் அவளிடம் பேச்சு கொடுக்காமல் அமைதியாகவே வந்தேன் ... சிறிது நேரம் கழித்து அவளாகவே  அந்த அமைதியைக் கலைத்தாள்..  அதற்கு பின் எங்களுக்குள் நடந்த உரையாடல்
"அம்முவுக்கு ஒரே ஜுரம், டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும் ... ஒரு டிக்கெட் கூட மாட்ட  மாட்டிங்குது "
நான் பதில் ஏதும் பேசவில்லை ......
"அம்மு என் பொண்ணு எட்டு மாசம் ஆகுது .. என்னாலதான் என் பாப்பாவுக்கு ஜுரம்"
"நேத்தே  அம்முக்கு கொஞ்சம் ஒடம்பு சூடு இருந்துச்சு.. ஆனா எங்க கவனிக்க விட்டான் அந்த படு பாவி .."

நான் பேசாவிட்டாலும் அவளாகவே எல்லாவற்றையும் கூறினாள்..என்னிடம் பேசி கொண்டிருக்கும் போதே கண்டக்டரும் வந்து தான் பங்குக்கு கொஞ்ச நேரம் அவளிடம் வழிந்து விட்டு சென்றார் ..
 

"நேத்து அம்முவ கட்டுலுக்கு அடியில படுக்க வெச்சுட்டேன் துணி கூட விரிக்காம.. இந்த குளுர்ல தர வேற ஐசு மாறி இருந்துச்சு .. ஜுரம் அதிகம் ஆய்டுச்சு..."

கட்டிலுக்கு அடியிலயா ??...

"எப்போதுமே கஸ்டமர் வரும் போது அம்முவ காயத்திரி கிட்டயோ ராணி கிட்டயோ ( அதே தொழிலில்  இருப்பவர்கள்..) ஒரு மணி நேரம் பாத்துகோனு சொல்லுவேன்.. ஆனா நேத்து அவங்களுக்கும் கஸ்டமருங்க வந்துட்டாங்க .. என்ன பண்றது .. 
அம்முவ கட்டுலுக்கு அடியில படுக்க வெக்க வேண்டியதா போய்டுச்சு ... 
எல்லாம் என் நேரம் பாதியில ஜுரத்துல பாப்பா அழவும் அவன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு  ஓடிட்டான்.. என் பொழப்பே போச்சு ... 
ஓனர் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டான்... கையில இருந்த காசையும் வாங்கிக்கிட்டான் .... "

இடையில் அவளின் போன் ஷஷ்டிய நோக்க  சரவண பவ என பாடி அழைத்தது ... எடுத்து பவ்யமாய் காதில் வைத்து
"அண்ணா இன்னும் ஒன்னும் தேரல ... ஒரு இரு நூறு ரூபா குடுண்ணா.. பாப்பாவ டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்துடறேன் ... " மறுமுனையில் என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை ..



போனை அணைத்த அவள் திரும்பவும் தொடர்ந்தாள். ஆனால் இப்போது கண்களில் நீர் கோர்த்திருந்ததது.

"கொஞ்சம் கவனிக்காம விட்டு இது பொறந்துடுச்சு. என்ன மாதிரி இதுவும் ஆயிட கூடாது.. என்ன பெத்தவ பண்ண தப்ப நானும் செய்ய கூடாதுன்னு பாக்கறேன். 
நான் எல்லாம் ஒரு நைட்டு போனா ஆயிரக்கணக்கா
கொண்டு வருவேன் ஆனா இந்த பாவி எல்லாத்தையும் புடிங்கிக்குவான் அவன் கண்ணுக்கு தெரியாம ஒளிச்சுவெச்சாதான் காசு பாக்க முடியும் என் புள்ளைய வளர்த்த முடியும்" என்று கண்களில் கண்ணீருடன் பேருந்தின் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றாள்..

இறங்கும் போதும் அதே உரசல்கள், கண்டக்டரின்

வழிசல்...  

கட்டிலுக்கடியில் பெற்ற குழந்தையை விட்டு விட்டு கட்டிலுக்கு மேலே தன் உடம்பை விற்று சம்பாரிக்கும் அந்த தாயின் நிலையை நினைத்தால் ஒரு புறம் கோபம் வந்தாலும் இன்னொரு புறம் பரிதாபமாகவும் இருந்தது ...  

அவள் உடையில் ஆபாசம் இல்லை .. பார்க்கும் அந்த ஆண்களின் கண்களில் மட்டுமே ஆபாசம் இருக்கிறது.. மனம் நிறைய அழுக்கும் வக்கிரங்களையும் வைத்துக் கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு  நானும் ஆண் மகன் என்று சொல்லி திரிய வெட்க பட வேண்டும் .. கார்த்திகை மாதங்களில் வெளியில் திரியும் ஐந்தறிவு கொண்ட அந்த நான்கு கால் ஜீவன்களுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்....
தான் எதிரில் இருக்கும் பெண்ணிற்கும் உணர்வுகள் உண்டு என்பதை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறான் .. 

பாரத மாதா தொடங்கி எல்லா பெண்ணிற்கும் மதிப்பு பெயரளவில் மட்டுமே ..ஊரில் உள்ள கடவுள்களில் முக்காலும் பெண் கடவுள்களே  இத்தனைக்கும் மேலே ஒவ்வொரு வீட்டிலும் அம்மா என்ற ஒரு கடவுளை வைத்துக் கொண்டு பெண்ணை வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த ஆண்களின் மன நிலை என்று மாறப் போகிறது??????